தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை லண்டன் கோர்ட்டில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராகிறார்.