Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம்-வடக்கு மாகாண முதலமைச்சர்

November 19, 2017
in News, Politics
0

இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகிவிட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் நேற்று(18) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக இங்கே வருகை தந்திருக்கும் கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை வடமாகாணத்தின் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு வடமாகாண சபையின் விவசாய அமைச்சும், சனசமூக நிலையங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்கள் என அனைவரும் இணைந்து கொண்டு இந்நிகழ்வுகளை வெகுசிறப்பாக முன்னெடுத்து வருவது நீங்கள் அனைவரும் நன்கறிந்ததே.

அந்த வகையில் இந்த வருடமும் ‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் வெகுஜன அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அதன்தலைவர் கௌரவ பொ.ஐங்கரநேசனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

மரநடுகை மாத கொண்டாட்ட நிகழ்வு வடமாகாணசபையின் திணைக்களங்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நிகழ்வு என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவுகின்றது. இந் நிகழ்வானது வடமாகாணசபையின் விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இது வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பொது மக்களுக்கும் உரிய ஒரு நிகழ்வாகும்.
நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் பற்றியும் சந்தடியின்றி எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் பற்றியும்பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இவை மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோஎன்ற சந்தேகம் எம்மிடம் வலுப்பெற்றுள்ளது.ஏனென்றால் வடமாகாணத்தின் சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தன்னகத்தே கொண்டிருப்பது விந்தைக்குரியது. எமது சூழல் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டது. எமது கலை, பண்பாட்டு விழுமியங்கள் பெரும்பான்மை சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களில் இருந்து வேறுபட்டது.

எனவே எமது சூழலியலைப்பாதுகாக்கின்ற பொறுப்பு எமக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இன்று எமது பகுதிகளில் காணப்படும் பெரிய மரங்களும் விருட்சங்களும் வகைதொகையின்றி வெட்டி அழிக்கப்படுகின்றமையும் அதன் பலனாக மழைவீழ்ச்சி சில வருடங்களில் வெகுவாகக் குன்றிப் போவதும் விவசாயப் பயிர்ச்செய்கை மற்றும் உபஉணவுப் பயிர், மரக்கறி வகைகள் உற்பத்தி வீழ்ச்சியடைவதும் வருடாவருடம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. போர்க் காலத்திலும் பசுமை அழிவு நடந்தது. இப்பொழுதுந் தொடர்ந்து நடைபெறுகிறது.

நவீன இலத்திரனியல் கருவிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் அபரீத வளர்ச்சி காரணமாக எமது பகுதியில் காணப்பட்ட சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது வருத்தத்திற்குரியது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் மூளை வளர்ச்சிகள் கூட பாதிப்படையக்கூடும். தினமும் பல இலட்சக்கணக்கான நுண் அலைகள் குறுக்கும் நெடுக்குமாக எம் மத்தியில் பயணித்த வண்ணமாக உள்ளன. இவை குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.

வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்த நுண்ணலைகளின் தாக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. எனினும் எமது பகுதிகளில் தேவைக்கு அதிகமாக இந்தப் பாவிப்பானது ஒரு நவீன கலாச்சாரமாக மாறியிருப்பது வேதனைக்குரியது.

பாடசாலைக்கு செல்கின்ற ஒரு சிறு பிள்ளையின் கையில் கூட அன்ரோயிட் கையடக்கத் தொலைபேசிகள் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகள் பற்றியும் இத்தொலைபேசிகள் சமூக கலாச்சார விழுமியங்களில் ஏற்படுத்தக் கூடிய பாரிய தாக்கங்கள் பற்றியும் இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் அறிந்துள்ளார்களோ நாம் அறியோம். வளர்ச்சியடைந்துள்ள இந்த இலத்திரனியல் யுகத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம். எனினும் இந்த இலத்திரனியல் சாதனங்களை எம்மில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கவேண்டும், எங்கு வைத்திருக்க வேண்டும்; அதன் பயன்பாடுகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும் என்பன பற்றி பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.

எமக்கு முன்னைய சந்ததி பசுமைச் சூழலில் மிகச்சிறிய வருமானத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்;. இன்று வருமானம் அதிகரித்து விட்டது.

எனினும் வாழ்வில் இன்பமும் அமைதியும் மிகவும் குன்றிவிட்டன.அகலக் கால் வைக்கப்போய் இருப்பையும் இழந்த கதையாகி விட்டது. கொழும்பில் நண்பர் ஒருவருடைய அழகான வீடு ஒரு பிற நாட்டு ஸ்தானிகர் ஒருவருக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் நண்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தை வெட்டவேண்டியிருப்பதாகக் கூறப்பட்டது.

அனுமதி வழங்கினார் நண்பர். அடுத்து வீட்டைப்போய் அவர் பார்க்கும் போது தோட்டம் வெட்ட வெளியாக இருந்தது. மரங்கள் எல்லாம் நீக்கப்பட்டிருந்தன. ஏன் என்று கேட்டால் மரங்கள் பறவைகளுக்கும் வேறு ஜந்துக்களுக்கும் உறைவிடமாகையால் பாதுகாப்புக் கருதி அவை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார் ஸ்தானிகர். இன்றைய நிலை இவ்வாறு மாறியுள்ளது. இந்நிலையில் இயற்கையை நேசிக்கின்ற, இயற்கையோடு ஒன்றி வாழுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு எமக்கு உண்டு. இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம்.

உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகிவிட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும்.

அந்த வகையில் இந்த மரநாட்டுவிழா நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். சூழலை நேசிக்கின்ற சூழலியலாளனாக விளங்குகின்ற கௌரவ பொ.ஐங்கரநேசன், வருடா வருடம் கார்த்திகை மாத மரநாட்டு நிகழ்வுகளில் புதிய புதிய சிந்தனைகளை மக்களிடையே விதைத்து வருவது போற்றுதற்குரியது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் வடமாகாணம் முழுவதும் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள்நடைபெற்றன.

யாழ் செம்மணிப் பகுதியில் உள்ள ஏரியின் உள்ளும் மரங்களை நாட்டி சாதனை புரிந்தார்.ஒரு சில கன்றுகளைத் தவிர அவையாவும் இன்று சிறப்பாக வளர்ந்து வருகின்றன. காரைநகர் பொன்னாலை பாலத்தின் இருமருங்கிலும் கண்டல் செடிகளை நாட்டி அவை தற்போது கண்டல் மரங்களாக வளரக்கூடிய அளவுக்கு உருப்பெற்றிருக்கின்றன.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருட மரநடுகைமாத சிறப்பு நிகழ்வுகளாக மரநடுகையும் மலர்க்கண்காட்சி நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் வடமாகாணத்தில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் மற்றும் பழ மர விற்பனையாளர்கள் சங்கங்கள் பங்கேற்றுக் கொண்டு தமது உற்பத்திகளை கண்காட்சிக்கு வைப்பதும் அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இதே இடத்தில் இன்று முதல் 24.11.2017 வரை தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெற இருக்கின்றது.

பொதுமக்களுக்கு நல்ல இனக் கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் அதே போன்று உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை வளப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் இவை அமையவிருக்கின்றன.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் சங்கிலியன் பூங்காவையும் பழைய பூங்காவையும் இணைக்கின்ற கச்சேரி நல்லூர் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக மரங்களை நாட்டி ஒரு பசுமை நிறைந்த சாலையாக இவ் வீதியை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ் வீதியை “பசுமை இடைவழி” அல்லது““Green Corridor”என்றோ, அழகுக்காட்சி வழி“Vista””என்றோ மக்கள் அழைக்கக்கூடிய விதத்தில் ஒரு பசுமைச் சாலையாகமாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரிப்பெறப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். இது வரவேற்புக்குரியது. இச்சாலையின் இருமருங்கிலும் நாட்டப்படுகின்ற மரங்களை நீருற்றி பராமரிக்கின்ற பொறுப்பை அவ்வப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்நிலையில் மக்களிடையே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் குறிக்கோள்கள் ஆழப்பதிந்திருப்பது தெளிவாகின்றது.

அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய் என்பவர்’ஒவ்வொரு மரம் நாட்டப்படும்போதும் சமாதானத்துக்கான விதை ஊன்றப்படுகின்றது’ என்றார். அதையே இன்று தம்பி நிலாந்தனின் பேச்சு வலியுறுத்தியது. இவர்கள் கூற்றுக்கு அமைவாகப் பாடசாலை மாணவர்கள், இளையவர்கள், முதியோர்கள்என அனைத்துத் தர மக்களிடையேயும் ‘மரங்கள் – சுற்றுச் சூழலின் பாதுகாவலர்கள்’ என்ற கருத்தை விதைத்து வரும் இந்த இயக்கம் தொடர்ந்து சூழலியல் தொடர்பில் பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களையும் விழிப்புணர்வுகளையும் கொண்டு செல்ல வேண்டும்; அதன் மூலம் பசுமையான ஒரு சுற்றுப்புறச் சூழலை எமது வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து கொண்டு பாடுபடுவோம் எனத் தெரிவித்து இந்த நல்ல நிகழ்வு சிறப்புற நடைபெற எனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடைபெறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமை முக்கியமானது

Next Post

விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்

Next Post
விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்

விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures