நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை நவம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இதன் போது 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத்துறை, பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட கொவிட் ஒழிப்பில் முன்னிலை வகிப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத்துறை, முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் முன்னிலையிலுள்ளவர்கள், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள், விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமையளிக்கப்படும்.
அதன் பின்னர் படிமுறையாக விசேட தேவையுடையவர்கள் மற்றும் ஏனையோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.
இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்கமைய நவம்பர் மாதம் முதல் இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்றார்.
இதே வேளை நாட்டில் 70 சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டின் முழு சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு முழுமையான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 32 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நிச்சயம் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள்.
எவ்வாறிருப்பினும் தடுப்பூசியின் ஊடாக முழுமையான பாதுகாப்பு கிடைக்கப் பெறாது என்பதையும், அடிப்படை சுகாதார விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம்.
ஆனால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் நபரொருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் கொவிட் தொற்றுக்கு உள்ளானாலும் , மரணமடைதல் அல்லது நோய் நிலைமை தீவிரமடைவது தவிர்க்கப்படுகிறது.
அத்தோடு தொற்றுக்குள்ளாகும் நபரின் உடலில் உருவாகும் வைரஸின் அளவிலும் கனிமானளவு வீழ்ச்சி ஏற்படும் என்பதோடு , சூழலுக்கு வைரஸை பரப்பும் வீதமும் குறைவடையும்.
இதுவே தொற்று பரவும் வீதம் குறைவடைவதற்கு உதவுகிறது என்று வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]