Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நம்பிக்கை வீணடிக்கப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

December 4, 2016
in News
0
நம்பிக்கை வீணடிக்கப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

நம்பிக்கை வீணடிக்கப்படுமா? செல்வரட்னம் சிறிதரன்

நாட்டில் உறுதியான அரசியல் போக்கை ஏற்படுத்தி சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நிலைநிறுவத்துவதற்கான முயற்சிகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

ஆயினும் இந்த முயற்சிகளின் இரண்டு முக்கிய விடயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சிக்கல்களுக்கு எந்த வகையில் முடிவேற்படும் என்பது தெரியவில்லை.

அதனை அனுமானிப்பது, இன்றைய சூழலில் கடினமான காரியமாகத் தோன்றுகின்றது.

புதிய அரசியலமைப்பின் மூலம் உறுதியான அரசியல் போக்கிற்கான அடித்தளத்தை இட முடியும் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கையாகும்.

அதேவேளை, சமாதானத்தையும் ஐக்கியத்தையும் நிலைநிறுத்துவதற்கு நாட்டு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

பல்லினம், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாட்டில் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் காரியங்களை முன்னெடுத்துள்ளார்.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம், இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி, ஒருவரை யொருவர் தீராத சந்தேகத்துடன் நோக்குகின்ற மோசமான நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.

இத்தகைய சந்தேகமான மனப்போக்கை இல்லாமற் செய்து, நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தவதென்பது சாதாரண காரியமல்ல.

அது மிகவும் கடினமான காரியமாகும் என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.

இத்தகைய பின்னணியிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கமும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கைங்கரியமும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பு

உறுதியான அரசியல் போக்கு ஒன்றை உருவாக்குவதற்கு நடைமுறையில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

அதற்கு உறுதுணையாக தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டு யதேச்சதிகாரப் போக்கில் பயணித்த முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தைப் பதவியில் இருந்து

இறக்கி, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுதுணையாக இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற அரசியல் ஆதரவின் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அடிக்கடிசுட்டிக்காட்டி வருகின்றார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையில் தமிழ் மக்கள் அளித்த பேராதரவு காரணமாகவே நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது என்பதை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றியுடையவனாக இருந்து செயற்படுவேன் என்ற உறுதியையும் அவர் பகிரங்கமாக வழங்கியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குவதற்கான முயற்சிகளின்போது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று, நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் ஒப்புதல் அளித்திருந்தார்கள்.

இவ் விடயம் திருகோணமலையில் இன்றைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விளக்கிக் கூறிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன்தெரிவித்திருக்கின்றார்.

எனவே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மூன்றாவது அம்சமாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயம் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகியிருக்கின்றது.

எனவே, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை என்ற இரண்டு விடயங்களில் மாற்றம் கொண்டு வருவதற்காக, புதிய அரசியலமைப்பை உருவாக்க முனைந்திருந்த பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், தங்களோடு இணைந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்குஒத்துழைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்காகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தையும், புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நோக்கங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், யுத்தம் ஒன்று மூள்வதற்குக் காரணமாக இருந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

இதன் காரணமாகவும், நல்லாட்சி அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்புக்கு ஆளாகியிருக்கின்றது. நல்லிணக்கத்தை உருவாக்குதல் அது மட்டுமல்லாமல், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளையும் பயனுள்ள வகையில் முன்னெடுக்கத் தவறியிருந்தது. இதனால், நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறுப்பையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்க வேண்டியதாயிற்று.

நல்லிணக்கத்தை உருவாக்குதல் என்பது இனங்களுக்கிடையில் நல்ல உறவை ஏற்படுத்துவது என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. உண்மையில், யுத்த மோதல்களின் போது இழைக்கப்பட்ட உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற கடமையையை அது மையப் பொருளாகக் கொண்டிருக்கின்றது.

இறுதி யுத்த மோதல்களின்போது இழைக்கப்பட்ட அநீதிகள், உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேசத்தின் கோரிக்கையை,முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாகத் தட்டிக் கழித்து வந்தது. இதனால் இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தங்கள் அழுங்குப் பிடியாகத் தொடர்ந்தன.

இந்த வகையிலேயே ஐநா மனித உரிமைப் பேரவையில் அடுத்தடுத்து இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்தப் பிரேரணைகளின் பின்னணியில் அமெரிக்கா முழுமூச்சாகச் செயற்பட்டிருந்ததை அனைவரும் அறிவர்.

மனித உரிமை, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் என்பவற்றை மீறியமைக்காக பொறுப்பு கூறுவதற்குத் தவறியது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும்வகையில் செயற்பட்டனர்

அத்துடன் சீன சார்பு கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நாட்டம் கொண்டிருந்தன.

எனவேதான், சர்வதேசத்தின் இராஜதந்திர ஆதரவும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு உறுதுணையாக இருந்தது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்தப் பின்னணியிலேயே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது அதற்கு இணை அனுசரணை வழங்கி, அந்தப் பிரேரணையில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தது.

இந்த வகையிலேயே, நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுகின்ற பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் வலிந்து ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.

இத்தகைய பின்னணியிலேயே, புதிய அரசியலமைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும் முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இப்போதைய சிக்கல்கள் என்ன?

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருப்பதாகவும் அவற்றில் பல விடயங்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாகவும், பல விடயங்களில்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், பல விடயங்கள் இன்னும் பேசப்படவுள்ளதாகவும்தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் திருகோணமலையில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்துகையில் கூறியிருக்கின்றார்.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நம்பிக்கை தருகின்ற நன்மையான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஆயினும், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து இன்னும் முடிவேற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் தரப்புக்களுடன் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இணைப்பின் மூலம் தமது அரசியல் நலன்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருப்பதைக் காண முடிகின்றது.

இது விடயத்தில் முஸ்லிம் தரப்புக்களுடன் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும், இன்னும் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டி உள்ளதாகவும்கூட சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

இருப்பினும் 2016 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறியவாறு அதற்கான சூழல் கனிந்து காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் காரியங்களைக் குழப்பாமல் கவனமாகச் செயற்பட வேண்டியிருப்பதாகவும், அதே கருத்தை ஜனாதிபதியும் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் கூட அவர் கூறியிருக்கின்றார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் காரியங்கள் நகர்ந்து கொண்டிருப்பதாகவே ஊடகங்கள் அவருடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு முயன்றிருக்கின்றன.

இருந்த போதிலும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் தள்ளாடி, தள்ளாடி பாதிவழியை எட்டிப்பிடிக்க முனைந்து கொண்டிருப்பதையே அவருடைய கருத்துக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரையில் எட்டப்பட்டுள்ள நிலைமைகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரச தரப்பினர் உறுதியாக இருப்பது போலவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உறுதியாக இருக்கின்றது. ஆயினும் அதிகாரங்கள் பகிரப்பட்ட ஓர் ஐக்கிய இலங்கை என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

இருப்பினும் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒற்றையாட்சியைக் கொண்ட ஐக்கிய இலங்கையையே பெரும்பான்மை இன அரசியல் தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.

சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசமாகக் கருதப்படுகின்ற வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், தமிழ் அரசியல்வாதிகள் அந்தப் பிரதேசத்தைத் தனிநாடாக்கிக் கொள்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக முடிந்துவிடும் என்ற அச்சம் பெரும்பான்மை இன அரசியல் தரப்பினரிடம் காணப்படுகின்றது.

அத்தகைய நிலைமை ஏற்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட வகையில் இரண்டு மாகாணங்களையும் பிரிப்பதற்காக சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த வகையில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பாரிய விவசாய அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடும், கல்லோயா குடியேற்றத் திட்டமும் முக்கியமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வகையில், அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் உருவாக்கப்பட்டுள்ள வெலிஓயா சிங்களக் குடியேற்றத் திட்டமும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இத்தகைய பின்னணியில்தான், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட ஒரு மாநிலயத்தில் சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றது.

இந்தப் பிரதேசத்தில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கென தனி அலகு இந்தப் பிராந்தியத்தில் உருவாக்கப்படலாம் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது. சமஸ்டி முறைமைக்கும் நாங்கள் இணங்கமாட்டோம் என்று அரச தரப்பினர் பிடிவாதமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு இணைந்த, பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சி முறை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வ காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற அதேவேளை, பொறுப்பு கூறும் விடயத்தைக் கைகழுவிவிடும் நோக்கத்துடன் செயற்படுவதற்கு அரசாங்கம் முனைந்திருக்கின்ற ஒரு போக்கு வெளிச்சத்திற்குவந்துள்ளது.

இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு காணப்படும் என்பது தெளிவில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துகின்ற தந்திரோபாய ரீதியில் அரசாங்கம் செயற்பட முற்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.

ஏதோ ஒரு வகையில் – இராஜதந்திர வியூகங்களின் மூலம் அரசியல் ரீதியாக அழுத்தங்களைப் பிரயோகித்து, தான் விரும்புகின்ற முறையில் ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடலாம் என்ற போக்கில் அரசாங்கம் செயற்பட முற்பட்டிருப்பதை உணர முடிகின்றது.

இந்தத் தீர்வானது, முன்னைய அரசாங்கங்களினால் முன்வைக்கப்படாத அளவுக்கு முன்னேற்றகரமான ஒரு தீர்வாக இருக்கலாம்.

அந்த விடயத்தில் அரசாங்கம் திவிர கவனம் செலுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம். அந்த வகையிலேயே அரசாங்கத்தின் நகர்வுகள் கோடி காட்டுகின்றன.

எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை எப்படியாவது சம்பாதித்துவிடலாம். அதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தையும் உருவாக்கிவிட முடியும் என்ற அரசியல் ரீதியான நப்பாசையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தென்னிலங்கையில் வைபவம் ஒன்றில் உரையாற்றியபோது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவத்தினரையும், யுத்தத்தை நடத்திய அரசியல் தலைவர்களையும் சர்வதேச யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தானே மீட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

சர்வதேச நாடுகள் பலவற்றுக்குச் சென்று நிலைமைகளை எடுத்துக் கூறி யுத்தக் குற்றச்சாட்டுக்களைக் கைவிடுமாறு கோரியிருப்பதாகவும், அதனை அவர்கள் ஏற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட்ட்ரம்பிடம் அமெரிக்கா ஐநா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கைவிடுமாறு கோரி கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வ காணும் அதேவேளை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு கூறுல் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, ஐநா மனித உரிமைப்பேரவையின் 2015 ஆம் ஆண்டின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனாவே, பொறுப்பு கூறல் விடயத்தை அமெரிக்கா கைவிடச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.

இவ்வாறு அவர் செயற்பட முற்பட்டிருப்பதானது, பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை சிக்கலான ஒரு நிலைமைக்கு உள்ளாக்கியிருப்பதையே சுட்டிக்காட்டுகின்றது என்று இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்வதேச மட்டத்திலான ஒரு பிரேரணை தொடர்பில் சம்பந்தப்பட்ட நாட்டின் வெளிவிவகார அமைச்சரே கடிதம் எழுதவோ

கோரிக்கை விடுக்கவோ வேண்டும் என்றும், அதுவே இராஜதந்திர நடவடிக்கை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நடைமுறைக்கு மாறாக ஜனாதிபதி அமெரிக்கா ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவதோ அல்லது அது தொடர்பில் உரையாடுவதோ முறையற்ற ஒரு நடவடிக்கையாகும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

பொறுப்பு கூறல் பிசுபிசுத்துவிடுமா?

பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து இணை அனுசரiணை வழங்கிய ஒரு பிரேரணையை விலக்கிக் கொள்ளுமாறு கோருவதற்கு முற்பட்டுள்ளஜனாதிபதியின் செயற்பாடானது, பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியான சிக்கல்களில் சிக்கியிருப்பதையே காட்டுகின்றது என்றும் அந்த இராஜதந்திர வட்;டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மறுபுறத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பொறுப்பு கூறல் விடயங்களை இலங்கை அரசாங்கம் அம்போ என கைவிடப் போவதற்கான அறிகுறியாகவும் இதனை நோக்க வேண்டியிருக்கின்றது.

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கு அமைவாக நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அரசாங்கம் அது தொடர்பிலான பொறிமுறைகளைஉருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது. அந்த வகையில் காணாமல்போனோருக்கான அலுவலகத்தை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால்எடுக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தடுத்து, விசாரணை பொறிமுறை, மீள் நிகழாமைக்கான பொறிமுறை போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையிலேயே ஜனாதிபதி பொறுப்பு கூறல்விடயத்தையே கைவிடக் கோரும் கோரிக்கையை அமெரிக்காவின் புதிய அதிபரிடம் முன்வைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நடவடிக்கை மிகவும் பாரதூரமானதாகவே இராஜதந்திர வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள காட்டமான கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றது.

புதிய அசியலமைப்பை உருவாக்குவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்படுகின்ற ஆதரவை, யுத்தத்தின் விளைவுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்களை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்துவிடுவதற்கு சாதகமாக அரசு பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதன் பின்னர், யுத்தகாலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தை அரசங்கம் கைகழுவிவிடப் பார்க்கின்றது என்பதையே சுமந்திரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல், நாட்டில் நல்லிணக்கம், அமைதி, சமாதானம், ஐக்கியம் என்பன நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளற்றவகையில் விட்டுக்கொடுப்புடன் நல்லாட்சி அரசாங்கத்துடன் செயற்பட்டு வருகின்றது.

அவ்வாறு தாங்கள் செயற்படுவதை தமிழர் தரப்பின் பலவீனமாகவே அல்லது இயலாமையாகவோ அரச தரப்பினர் கருதிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்திருப்பதையே காண முடிகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், முக்கியமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகிய தனிப்பட்ட நபர்களாகிய அரசியல் தலைவர்கள் மீதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வைத்துச் செயற்பட்டு வருகின்றது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலான அரசியல் செயற்பாட்டை, தென்பகுதியில் உள்ள கடும் போக்காளர்களும், இனவாத மதவாத அரசியல் தீவிரவாதிகளும் தமிழர்களுக்கு எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்துவிடப் போகின்றார்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றார்கள்.

அதற்காக வரையறையற்ற வகையில் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு நிலைமையைக் குட்டிச் சுவராக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அத்தகைய எதிர்ப்பு நிலைப்பாட்டை முறியடித்து முன்னேறிச் செல்ல வேண்டிய அரசாங்கத் தரப்பினர் – குறிப்பாக ஜனாதிபதி குறுக்கு வழியில் செல்ல முற்படுகின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட முற்பட்டிருப்பது நல்லதாகத் தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதையே இந்த நிலைமைகள் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் 2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு எட்டப்படும் என்று கொண்டிருக்கின்ற நம்பிக்கையையும், அவர் தமிழ் மக்களுக்கு இது தொடர்பில் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பையும் இந்த சிக்கல்கள் சீர்குலைத்துவிடக் கூடாது.

அத்தகைய ஒரு நிலைமை உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்த நல்லாட்சியின் தலைவர்களினதும், அதன் பங்காளர்களினதும் தலையாய பொறுப்பாகும்.

Tags: Featured
Previous Post

ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: சாதாரணமானது இல்ல.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

Next Post

பல இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக கருணா தெரிவிப்பு

Next Post
பல இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக கருணா தெரிவிப்பு

பல இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக கருணா தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures