நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையால், டிசம்பர் மாதமாகும் போது எதிர்பார்க்காத அளவில் பாரியளவில் கொவிட் தொற்றாளர் அதிகரிப்பதற்கான முன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையின் காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.
கடந்த வாரத்தில் விடுமுறை தினங்களில் மக்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றாமல் சுற்றுலாக்களுக்கு சென்றமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அதேபோன்று கடற்கரை விருந்துபசாரங்கள், களியாட்டங்களிலும் சுகாதார விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவக் கூடிய வகையில் செயற்பட்டனர்.
எனவே தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
தற்போது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கொவிட் தொற்று ஏற்பட்டால் மரணங்கள் பதிவாகும் வீதம் குறைவாகவே காணப்படும்.
எவ்வாறிருப்பினும் கொவிட் கொத்தணிகள் உருவாகுதலுடன், டிசம்பர் மாதமாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம் தற்போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.
எனவே தான் டிசம்பராகும் போது நாம் எதிர்பார்க்காதளவில் பாரிய கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]