மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் தொடர்ந்து நிலவும் புகைமூட்டத்தால் 809 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பேராக்கில் 205 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 705 தொடக்கப்பள்ளிகளும் 104 உயர்நிலைப்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக சரவாக் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 252, 237 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
சரவாக்கில் ஐந்து இடங்களில் ‘ஏபிஐ’ கற்றுத்தரக் குறியீடுகள் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பதிவாகின. குச்சிங் (269), சமரஹன் ( 229), சிபு (231) சரிகேரி (221), ஸ்ரீ அமான் ( 207) ஆகிய பகுதிகளில் புகைமூட்டம் வெகு அதிகமாக உள்ளது.
மலேசியாவில் 1,484 பள்ளிக்கூடங்கள் மூடல்
மலேசியாவின் ஏழு மாநிலங்களில் புகைமூட்டம் ஆரோக்கியமற்ற நிலையில் நீடிப்பதால் ஏராளமான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனை மலேசிய கல்வி அமைச்சு நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது.
நேற்றுக் காலை நிலவரப்படி சரவாக், சிலாங்கூர், புத்ரா ஜெயா, கோலாலம்பூர், பேராக், புலாவ் பினாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் 1,484 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதாகவும் அதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
ஆக அதிகமாக சிலாங்கூரில் 538 பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் 584,595 மாணவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு அடுத்து சரவாக்கில் 337 பள்ளிகளும் பேராக்கில் 303 பள்ளிகளும் மூடப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உடல்நலத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் பள்ளிகள் மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது நிலவரத்தைப் பொறுத்து அறிவிக்கப்படும் என்றும் அறிக்கை சுட்டியது.
இந்நிலையில், மலேசியாவுக்கு வெளியே கிளை பரப்பி இருக்கும் மலேசிய நிறுவனங்கள் காட்டுத் தீயை அணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க நிறுவனங்கள் மறுக்கும்பட்சத்தில் அதற்காகத் தனியாக ஒரு சட்டத்தை மலேசியா இயற்ற வேண்டி வரும் என்றும் அவர் நேற்று கூறினார். இந்தோனீசியாவில் தீ பற்றி எரியும் செம்பனை எண்ணெய் தோட்டங்களில் நான்கு மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்று இந்தோனீசிய சுற்றுப்புற அமைச்சர் சித்தி நுர்பாயா பக்கார் அண்மையில் தெரிவித்திருந்தார்.

