தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்காக அரச தலைவர், சுகாதார அமைச்சுக்கு நேற்று சென்றிருந்தார்.
இதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அரச தலைவர், நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் துரித செயற்திட்டங்களைக் கேட்டறிந்தார்.நிதி ஒதுக்கீடுகளைத் தடையாகக் கருதாது தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செல்லுமாறு பணிப்புரை விடுத்தார். தாதியர் உள்ளிட்ட தேவையான ஆளணியினரை உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சிகிச்சை நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படுமாயின், அவசர தேவையாகக் கருதி அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அரச தலைவர் தெரிவித்தார்.
இந்த வைரஸ் நோய் காரணமாக தென் மாகாண பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் காரணமாக அதற்கான தேவை ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இந்த வைரஸ் நோய் தொடர்பாக சுகாதார ஆய்வுகள் பிரிவினால் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நோய் பரவக்கூடிய அவதானமும் தற்போது காணப்படவில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

