துருக்கி புரட்சி: கைதானவரின் வழக்கு விபரங்களை வெளியிட மறுக்கும் கனடா
துருக்கியில் கடந்தமாதம் தோல்விகண்ட இராணுவ சதிப்புரட்சியின் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர் இமாம் தாவுத்தின் வழக்கு விபரங்கள் குறித்து அதிக தகவல்களை வெளியிட முடியாது என கனேடிய குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இந்த வழக்கின் விடயங்களை வெளிப்படையாக பேசுவது, அவருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தினருக்கோ சிறந்ததாக அமையாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ‘இமாம் வழக்கில் அனைத்து விடயங்களையும் எம்மால் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. எனினும் இந்த வழக்கு விடயத்தில் எமது ஆதரவினை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி இராணுவப் சதிப் புரட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து இங்கு பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இராணுவ சதிப்புரட்சிக்கு உதவி புரிந்ததாக கல்கரியைச் சேர்ந்த இமாம் தாவுத் ஹன்சியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் மற்றுமொரு கனேடியரான இல்ஹான் ஏர்டெம் கடந்த மாதம் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொண்டு வருகின்றது.