ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7 ஆவது இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் குழு 2 இலிருந்து பாகிஸ்தானுடன் அரை இறுதியில் இணையப் போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் கடும்போட்டி ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளிடையே நிலவுகின்றது.
சுப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு போட்டியும் நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் தலா 2 போட்டிகளும் மீதமுள்ளன.
ஆப்கானிஸ்தான் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடவுள்ளது. அதற்கு முன்பதாக நியூஸிலாந்து இன்றைய தினம் நமியாவை சந்திக்கின்றது.
இதேவேளை இன்றைய தினம் ஸ்கொட்லாந்தை எதிர்த்தாடவுள்ள இந்தியா கடைசிப் போட்டியில் நமிபியாவுடன் விளையாடவுள்ளது.
இந்த 3 அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகளையும் அணிகள் நிலையையும் நோக்கும் போது எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது.
ஆப்கானிஸ்தான் தனது கடைசிப் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்டால் 6 புள்ளிகளைப் பெறும்.
நியூஸிலாந்து தனது கடைசி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 8 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தை உறுதி செய்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுவிடும்.
ஒருவேளை நியூஸிலாந்து ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 3 அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது நிகர ஓட்டவேகமே அரை இறுதிக்கு செல்லும் 2ஆவது அணியைத் தீர்மானிக்கும்.
எனவே இந்த 3 அணிகள் சம்பந்தப்பட்ட எஞ்சிய போட்டிகள் அனைத்தும் அந்தந்த அணிக்கு நொக் அவுட் போட்டியாகவும் அழுத்தங்களைக் கொடுக்கும் போட்டியாகவும் அமையும் என்று கூறினால் தவறாகாது.
நியூஸிலாந்துக்கும் நமிபியாவுக்கும் இடையிலான போட்டி ஷார்ஜாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரமபமாகவுள்ளது.
இந்தியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டி துபாய் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]