இந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பாட்டுக்காக 4,500 ராணுவ கேன்டீன்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்பட்டு வருகிறது.
கேன்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் (Canteen Stores Department – CSD) எனும் இந்த ராணுவ கேன்டீன் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது 1948-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி துவக்கப்பட்டது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. ராணுவ கேன்டீனில் 5,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனை வரி இல்லாமல் சலுகை விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக இங்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் வாங்கினால் 90 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த நிலையில் சந்தையில் அறிமுகமாகும் புதிய வீட்டு உபயோக பொருள்களை ராணுவ கேன்டீன் மூலமாக ஆன்லைனில் உடனடியாகப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சிஎஸ்டி வாரிய நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஆன்லைன் விற்பனை தீபாவளிக்கு முன் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”புதிய ரக வீட்டு உபயோகப் பொருள்கள் சந்தையில் அறிமுகமாகும் அதே தினத்தில், அவற்றை ராணுவ கேன்டீன் வாடிக்கையாளர்களும் வாங்கும் விதத்தில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக இந்துஸ்தான் யுனிலீவர், புரோக்டர் அண்ட் கேம்பிள் உள்பட பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். புதிய பொருள்கள் அறிமுகம் செய்தவுடனே அவை எங்கள் சிஎஸ்டி கேன்டீன் வெப்சைட்டில் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது” என்றார்.
ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என நாடு முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன் மூலமாக வீட்டு உபயோகப் பொருள்களை 1.2 கோடி பேர் வரியின்றி வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

