பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தமில்லாத இன்னும் சிலர் சிறைகளில் இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எந்த சாட்சியும் குற்றச்சாட்டும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் அறிஞரை விடுதலைசெய்ய சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதி நடடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அவர் தொடர்பாக சிங்கள பத்திரிகைகளில் வரும் செய்திகள் மீண்டும் நாட்டுக்குள் இனவாத பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தமில்லாத இன்னும் சிலர் சிறைகளில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை சமுகத்துடன் இணைந்து வாழ சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏனெனில் சாட்சிகள் இல்லாமல் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் ஒருவரை தடுப்புக்காவலில் வைத்திருப்பது அவரின் அடிப்படை உரிமையை மீறும் குற்றமாகும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.