தலைவர் பிரபாகரன் மீண்டும் வரவேண்டும்…! இதே இடத்தில் கௌரவிப்பேன்: யாழில் அமைச்சர்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் கால் பதித்தபோது தனியாக சென்று அவருடைய வீட்டினை பார்த்திருந்தேன், அவருடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்தேன்.
அந்த வகையில், எதோ ஒரு மூலையில் உலகத்தில் எங்கு இருந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும், எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கின்ற போது எங்கள் அண்ணன் மீண்டும் இந்த மண்ணுக்கு வரவேண்டும் என்பதே எமது ஆசையாக இருக்கின்றது.
அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. நேர்மையான வழியில் நடந்த ஒரு நபர் யாருக்கும் துரோகம் செய்ய நினைக்கவில்லை, அடிமைத்தனத்தில் இருந்த மக்களை உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக தான் அந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தார்.
மீண்டும் வந்து இந்த இடத்தில் நிகழ்வுகளை தலைமை தாங்கி அவரை கௌரவிக்கை வேண்டிய தேவை உள்ளது என வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கூறினார்.