தமிழ் சினிமாவில் இரண்டு பாகங்கள் படங்கள்தான் அதிகமாக வந்திருக்கின்றன. அதை 2017ல் வெளிவந்த ‘சி 3’ படம் முறியடித்தது. அந்தப் படம்தான் தமிழில் முதன் முதலில் வெளிவந்த மூன்றாவது பாகத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. ஆனால், முதலிரண்டு பாகங்களைப் போல சிங்கம் (2010), சிங்கம் 2 (2013) பெயரை வைக்காமல் வித்தியாசமாக ‘சி 3’ எனப் பெயர் வைத்தார்கள்.
ஆனால், அது போல இல்லாமல் மூன்று பாகங்களிலும் ஒரே பெயரைத் தாங்கி வெளிவந்துள்ள பெருமையை ‘காஞ்சனா’ சீரிஸ் பெறுகிறது. ‘காஞ்சனா 3’ படத்தின் மூன்றாவது பாகம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதலிரண்டு பாகங்களும் அதே பெயரில்தான் வெளிவந்தன. காஞ்சனா (2011), காஞ்சனா 2 (2015) ஆகியவை நான்கு வருட இடைவெளியில் வந்தன. அதே போல மூன்ற்வது பாகமும் நான்கு வருட இடைவெளியில் வருகிறது.
இதற்குப் பிறகு வேறு ஏதாவது மூன்றாவது பாகப் படம் வெளிவருமா என்பது இனிமேல்தான் தெரியும். ஆனாலும், இந்த ஆண்டில் மேலும் சில இரண்டாம் பாகப் படங்கள் வெளிவர உள்ளன. “நீயா 2, தேவி 2, களவாணி 2, கழுகு 2, நாடோடிகள் 2” ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும், சில இரண்டாம் பாகப் படங்கள் தயாரிப்பில் உள்ளன.