உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் ஒன்று. அதில் உயர்தனிச் செம்மொழிகளான தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சிய மொழிகளில் தமிழ் மொழியைத் தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் இருக்கை (Chair) இருக்கிறது.
அந்தக் குறையைப் போக்குவதற்கான முயற்சியை முதன்முதலில் எடுத்தவர்கள் மருத்துவர் விஜய் ஜானகிராமன், திருஞான சம்பந்தம் மற்றும் வைதேகி. அவர்களைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் பேராசியர்களும் தன்னார்வலர்களாகப் பல இளைஞர்களும் இப்போது இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். மென்பொறியாளர் வெற்றிச்செல்வன் உலகளவிலான ஒருங்கிணைப்புகளைச் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தற்போது மொய் விருந்து நடந்து வருகிறது. இதனைச் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கா வாழ் மென்பொறியாளர் பிரவீனா ஒருங்கிணைத்து நடத்துகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியானது ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது.
இந்த இருக்கைக்காக தமிழ்நாடு அரசு பத்துக் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இருந்து திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் பல தன்னார்வலர்களும் நன்கொடையளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது