தகவலறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் தகவல் வார நிகழ்வுகள் தற்போது பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
‘கிராமத்திற்கு தகவல் உரிமை’ என்ற தொனிப்பொருளில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் குறித்த நடமாடும் சேவையும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் பாடசாலை மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமை தொடர்பான போட்டி நிகழ்வுகளும் இடம்பெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கூடாக ஒவ்வொரு பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்க வாய்ப்புள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பரவலாகக் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமென நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் செப்டெம்பர் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

