ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரை தாக்கிய பசாய் புயலுக்கு பெண் ஒருவர் பலியான நிலையில், மின் இணைப்புகள் போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவின் கிழக்கு பகுதியை, திங்கட்கிழமை காலையில் சக்திவாய்ந்த பசாய் புயல் தாக்கியது. மணிக்கு 207 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சுழற்காற்றில் மரங்கள் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததோடு, சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சுழற்காற்று புரட்டிபோட்டது.
புயல் தாக்கிய சமயத்தில் பலத்த மழையும் கொட்டி தீர்த்தது. மரங்கள் முறிந்து விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் மொத்த காமோகாவா ((Kamogawa))நகர் உட்பட சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.
புயலால் வீடுகள், கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில், சிபா நகரை சேர்ந்த 50 வயது பெண்மணி ஒருவர் பலியானார். அதேபோல் இச்சிகாரா பகுதியில் இளம்பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி புயல் பாதிப்புகளால் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். சாலை, ரயில் மற்றும் விமானம் என அனைத்து வகையான போக்குவரத்துகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சுமார் 130 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால், நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே சிபா நகரிலுள்ள மிதக்கும் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

