தேசிய ரீதியில் டெங்குத் தாக்கம் அதிகம் காணப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளை, தேசிய ரீதியில் டெங்குத் தாக்கத்தில் இரண்டாவதாக உள்ள யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ப்படவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி அரச தலைவரின் செயலாளர் தலைமையில் இது ஆராயப்படும்.
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
குடாநாட்டில் அதிகரிக்கும் டெங்குத் தொற்றைக் கடடுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் நிமால்க்கா, தகவல் திணைக்களப் பணிப்பாளர் நிர்மலி, மாவட்ட செயலர் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-:
குடாநாட்டில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 16ஆம், 17ஆம் திகதிகளில் சிறப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவும், தகவல் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
அதற்கு சகல ஊடகங்களும் ஓரே தினத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலத்திரனியல் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ள தகவல் திணைக்களம் ஏற்பாடு மேற்கொள்கின்றது.
இந்த சிறப்பு வேலைத் திட்டம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. – என்றார்.
கூட்டத்தில் சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிநிதி கருத்துத் தெரிவித்தார்.
“அடுத்த முறை வீட்டுத் தரிசிப்பின்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் பரிசோதனை அட்டை வழங்கப்படவுள்ளது. அதில் பார்வைக் குறிப்புகள் பதிவு செய்யப்படும். அதை வீட்டு உரிமையாளர்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். வீட்டுத் தரிசிப்புகளின்போது அதைக் கண்டிப்பாகக் காட்ட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 9 பிரிவுகளிலேயே டெங்குத் தொற்று அதிகம் காணப்படுகின்றது.”- என்று அவர் தெரிவித்தார்.