பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகள் மாத்திரம் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மெக்சிகோவில் உள்ள குவாடலஜாரா நகரில் நடைபெறவுள்ளது.
நடப்புச் சம்பியனும் முதல் நிலை வீராங்கனையுமான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும் இப்போட்டித் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து தரவரிசையில் 7 ஆவது இடத்திலுள்ள துனீசிய வீராங்கனையான ஆன்ஸ் ஜாபிரும் இப்போட்டித் தொடரிலிருந்து விலகிக்கொண்டார்.
இவ்விருவரின் விலகல் காரணமாக தரவரிசையில் 9 ஆவது இடத்திலுள்ள போலாந்தின் இகா ஸ்வியாடெக்கும், 10 ஆவது இடத்திலுள்ள ஸ்பெய்னின் போலா படடோசா ஆகியோருக்கு இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்படி பெலாரசின் ஆர்யனா சபலென்கா, செக் குடியரசு வீராங்கனைகளான கரோலினா பிளிஸ்கோவா, பார்பரா க்ரெஜிக்கோவா, போலாந்தின் இகா ஸ்வியாடெக், கிரேக்கத்தின் மரியா சக்காரி, ஸ்பெய்னின் போலா படோசா, கார்பின் முகுருசா, எஸ்தோனியாவின் அனட் கொன்டாவாய்ட் ஆகிய 8 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த 8 வீராங்கனைகளும் தலா 4 பேராக இரண்டு குழுக்களின் கீழ் லீக் முறையில் விளையாடவுள்ளனர். ஒவ்வொரு குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீராங்கனையும் ஏனையோருடன் தலா ஒரு முறை எதிர்த்தாடுவர்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இன்றைய முதல் நாள் போட்டியில் கிரெஜ்சிகோவாவை கொன்வெய்ட்டும், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருசாவும் எதிர்த்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]