மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.
அதில், என் அத்தை ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்று தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அதை அவர்கள் பரிசீலிக்கவில்லை. எனவே, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து ஜெ.தீபா கொடுத்த மனுவை 4 வாரங்களுக்குள் விசாரித்து, தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 23–ந் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமைச் செயலாளர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தீபாவுக்கு தமிழக அரசு சம்மன் அனுப்பியது.
கடந்த 2 முறை தீபா ஆஜராகவில்லை. அவருக்கு மூன்றாவது சம்மன் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்பு ஆஜராவதற்காக நேற்று மாலை 3.05 மணியளவில் தீபா தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.
வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் மற்றும் சில கட்சியினருடன் தீபா, தலைமைச் செயலாளர் அறைக்குச் சென்றார். 10 நிமிடங்களில் அறையில் இருந்து தீபா வெளியே வந்தார். பின்னர் அங்கிருந்த நிருபர்களுக்கு, தீபா அளித்த பேட்டி வருமாறு:–
வேதா இல்லம் என்னுடைய பூர்வீக சொத்து. என் பாட்டியால் சம்பாதிக்கப்பட்ட பூர்வீக சொத்து. அதற்கான வாரிசு உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு எழுத்துப்பூர்வமாக என்னிடம் எதையும் அரசு கேட்கக்கூடாது.
அந்த சொத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதை நினைவிடமாக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்று கோரியுள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்திருக்கின்றார்.
ஜெயலலிதாவின் வாரிசு என்று மேலும் பலர் கூறுகின்றனர். சம்பந்தமே இல்லாமல் சிலர் இப்படி புரளியைக் கிளப்பி, சர்ச்சையை உருவாக்குகின்றனர்.
ஜெயகுமார், ஜெயலலிதா என்ற இரண்டு பேர் மட்டுமே, சந்தியாஜெயராம் தம்பதியருக்கு பிறந்தவர்கள். வேறு யாரும் வாரிசு என்று கோரினால் அவர்கள் போலியானவர்கள். வேறு எந்த அதிகாரபூர்வ வாரிசோ, சட்டபூர்வ வாரிசோ கிடையாது.
அத்துமீறி சிலபேர் அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் வெளியேற வேண்டும். அந்த இல்லத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். எங்கு யார் வசித்தாலும் அது அத்துமீறல்தான்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் திணிக்கப்பட்ட ஸ்லீப்பர் செல் நிறைய பேர் என் அமைப்பில் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இப்போதுதான் வெளியே வந்து அவர்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர். மக்களிடம் இருக்கும் என் நல்ல பெயரைக் கெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அவர்களின் ஒரே தேவை என்னவென்றால், அரசியலைவிட்டு நான் விலக வேண்டும் என்பதுதான். அதற்காக எனக்கு பல தொந்தரவுகள், பொய் வழக்குகள், போலியான தகவல்கள் எல்லாம் தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா உயில் எழுதியதாகவும் தகவல் உள்ளது. அப்படி இருந்தால் அதை அட்டர்னி மூலமாக சட்டபூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இறந்து ஓராண்டு காலம் முடிந்தும் இன்னும் அதைச் செய்யவில்லை என்ற காரணத்தினால் அவர் உயில் எழுதவில்லை என்பது தெளிவாகிறது. ஒருவர் இறந்த பிறகு உயிலை கோர்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
வக்கீல் இல்லாமல் யாரும் உயில் எழுத முடியாது. என் பாட்டி எழுதிய உயில், என் கையில் இருக்கின்றது. ஜெயலலிதா சாதாரண நபர் கிடையாது. அவர் எந்த காலக்கட்டத்தில் உயில் எழுதியிருந்தாலும் நிச்சயம் அது கோர்ட்டுக்கு வந்திருக்க வேண்டும். அது வரவில்லை என்பதால் அவர் உயில் எதுவும் எழுதவில்லை என்பது தெளிவாகின்றது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், மூன்று இடைத் தேர்தல்கள் தொடர்பான கோப்பில் ஜெயலலிதா வைத்த விரல்ரேகை சந்தேகத்திற்குரியது என்று தி.மு.க. சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுபோல பல சந்தேகங்கள் இருக்கிறது. அதனால்தான், ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்னென்ன தவறுகள் நடந்திருக்கக்கூடும் என்று ஒரு மனுவை விசாரணை கமிஷனில் தாக்கல் செய்திருக்கிறேன்.
அதையும் தாண்டி சிபிஐ விசாரணை கேட்பதற்கும் இதெல்லாம்தான் காரணம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரிடம் கையெழுத்து வாங்குவதோ, கையொப்பம் வாங்குவதோ சட்டப்படியாக தவறு. ஆனால், அதற்கு சில விளக்கங்களை கொடுத்திருந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் கேட்டிருக்கிற முதல் கேள்வி, ஆஸ்பத்திரிக்கு ஜெயலலிதா கொண்டு வரப்படும்போது அவர் நினைவில் இருந்தாரா, நினைவு தப்பியிருந்ததா என்பதுதான். இந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்தாலே எல்லா கேள்விக்கும் விடை கிடைத்துவிடும்.
ஆர்.கே.நகர் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். இதன் காரணமாகத்தான் இந்த எழுத்துப்பூர்வமான மனு தொடர்பாக இரண்டு வாரங்கள் நேரம் கேட்டிருக்கின்றேன். ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வேன்.
மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவின் கால்கள் காணப்படவில்லை என்பது போன்ற பல சந்தேகங்களும், பல சர்ச்சைகளும் இருக்கிறது. விசாரணை கமிஷனில் நான் கொடுத்த மனுவில் இதையெல்லாம் கேட்டிருக்கிறேன். என்னென்ன அறுவை சிகிச்சைகள் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? யாருடைய அனுமதியை பெற்று செய்தார்கள்? எல்லாவற்றையும் கேட்டிருக்கிறேன்.
இதுவரையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. தனிப்பட்ட முறையில் சசிகலா குடும்பத்தினர் அவர்கள் உறவினர்களையே மருத்துவர்களாக வைத்துக்கொண்டு அவர்கள் என்னென்ன சிகிச்சை அளித்தார்கள். அதையும் இந்த விசாரணையில் கேட்டிருக்கின்றேன்.
இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ்க்கு கிடைத்திருப்பதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டது இது. தற்போது காலதாமதமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இதுசம்பந்தமாக மேல் முறையீடு செய்வேன்.
நான் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருக்கவில்லை என்ற ஒரேயொரு காரணத்தின் அடிப்படையில்தான் எனது மனு தள்ளுபடி ஆனது. மற்றபடி வேறு காரணங்கள் இல்லை. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
.