கொழும்பு தாமரை கோபுரத்தை அமைக்க 2 பில்லியன் ரூபா முற்பண நிதி, சீனா நெசனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டதாகவும், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான பாரிய நிறுவனமொன்று 2 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதென குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சீன அரசாங்கத்தை இழிவுப்படுத்துவதாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த பாரிய வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சீன நிறுவனங்களும் சீனாவின் பாரிய நிறுவனங்களாகும். ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனமொன்றுக்கோ எவ்வித நிதியும் வழங்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அரசாங்கம் 2 பில்லியன் ரூபா நிதியை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்ப முற்பணமாக செலுத்தியிருந்ததாகவும், அந்த 2 பில்லியன் நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு ஆணவமும் இல்லை என்பதுடன், ALIT என எவ்வித நிறுவனமும் சீனாவில் இல்லையெனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதிலேயே அவர் இதற்கான பதிலை வழங்கியுள்ளார்.

