நடிகர் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். படத்தின் படபிடிப்பு மும்பையில், இறுதி கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
போலீஸ் துறையை பின்னணியாகக் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கிறது. ரஜினிக்கு, போலீஸ் அதிகாரி வேடமும் கொடுக்கப்பட்டிருப்பதாக, படக் குழுவினர் செய்தியை கசிய விட்டதோடு, அது தொடர்பான படங்களையும் வெளியிட்டனர்.
இந்நிலையில், படபிடிப்பு விரைவில் முடியவிருப்பதால், தன்னுடைய அடுத்த படம் குறித்த கதை விவாதத்திலும் நடிகர் ரஜினி ஈடுபட்டிருப்பதாக கூறுகின்றனர். அதேபோல, ஒவ்வொரு படம் நடித்து முடித்ததும், நடிகர் ரஜினி, இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாத காலமாவது ஓய்வெடுப்பது வாடிக்கை. அந்த வகையில், ஆகஸ்டு இறுதி வாரத்தில் தர்பார் படம் முடிவடைந்த கையோடு, செப்டம்பர் முதல் வாரத்தில், இமயமலைக்குச் செல்ல, நடிகர் ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.













