கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, சாய்ந்தமருது, கல்முனை, மட்டக்களப்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் சுனாமி ஏற்படுவதாக வதந்தி பரவியதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில் சற்று அமைதியற்ற சூழல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதுடன், சில பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்திருந்ததாகவும், கடல் சற்று தாழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டதுடன் கரையோரப் பகுதிகளில் இருந்து பெருமளவு குடும்பத்தினர் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சற்று பதற்றமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுனாமி ஏற்படுவதாக வதந்தி பரவியதையடுத்து பாடசாலைகளுக்கு சென்ற பெற்றோர், தமது பிள்ளைகளை அழைத்துச் சென்றதாகவும், இதனால் பல பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களும் இன்று இயங்கவில்லை என்றும் பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் எந்தவொரு இயற்கை அனர்த்தமும் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மக்கள் வீணாக பீதியடைய தேவையில்லை என்றும், சுனாமி ஏற்படுவதாக பரவும் செய்தி வெறும் வதந்தி என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது.