நாட்டில் கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், 73 ஆவது சுதந்திரதின வைபவத்தில் பாடசாலை மாணவர்களை பங்கேற்கச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர தின வைபவத்தில் மரியாதை அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பதுளை – பசறை தேசிய பாடசாலை மாணவர் குழாமில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக நேற்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அந்த பாடசாலையை சேர்ந்த மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேநேரம் ஹற்றன் – குடாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டு சுதந்திரதின வைபவம் உள்ளிட்ட ஏனைய எந்த வைபவங்களிலும், பாடசாலை மாணவர்களை பங்கேற்கச் செய்வது ஆபத்தானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவிடம் எமது செய்திச் சேவையை வினவியது.
இதன்போது பதிலளித்த அவர், சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனைகளின் அமைய மாத்திரமே, தேசிய சுதந்திர தின நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதே நேரம் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில், பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான முறைமையிலும், குறித்த பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையின் கீழ் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கூறியதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் அதிக அளவில் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 2017 முதல் ,வரையான காலப்பகுதிக்குள் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்கும் எண்ணிக்கையில் எந்த வகையிலும் மாற்றமில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

