சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கலாம் என்ற சட்டத் திருத்தத்துக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மபியில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் தனியாக இருக்கும் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மேலும் இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படும் குழந்தைகளின் மன நிலை மிகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது. அதோடு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகள் பெரிய அளவில் தண்டிக்கப் படாமல் சிறிது காலத்திலலே சிறையிலிருந்து வெளியே வந்துவிடுகின்றனர்.
மேலும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது அதிக பட்ச தண்டனை வழங்குவதில்லை என்பதால் பல்வேறு சம்பவங்கள் வெளியே வருவதில்லை. இதையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாதிக்கப் பட்டவர்களின் தரப்பில் கோரப்பட்டது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வேண்டும்,
மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வழிவகை செய்ய சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் மபி அரசு இது குறித்து சமூக ஆர்வலர்கள், மகளிர் மற்றும் சிறார் நலன் சார்ந்து இயங்கும் நிறுவன அதிகாரிகள், குடும்ப பெண்கள், மகளிர் அமைப்புகள் ஆகிய பல்வேறு நபர்களிடம் இது குறித்து அறிக்கை கேட்டது.
இதில் பல்வேறு தரப்பினர் 12 வயதுக்கு கீழே உள்ள சிறார்களிடம் ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நபர்களை தூக்கில் போட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதனடிப்படையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கலாம் சட்டத்திருத்ததுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ம. பி. அரசின் இந்த சட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டெல்லி மற்றும் உபி போன்ற பெரு நகரங்களிலும் இது போன்ற சட்ட திருத்தங்களை மிக விரைவில் கொண்டு வரவேண்டும் என பலர் கருத்துக் கூறியுள்ளனர்.