”மறைந்த முன்னாள் பிரதமர், லால் பகதுார் சாஸ்திரியின் மரணம் குறித்த ரகசிய ஆவணங்களை, பகிரங்கப்படுத்துவது குறித்து, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் முடிவெடுக்க வேண்டும்,” என, மத்திய தகவல் ஆணையர், ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான, லால் பகதுார் சாஸ்திரி, 1966ம் ஆண்டில், சோவியத் ரஷ்யாவின் தாஸ்கன்ட் நகரில் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய தகவல் ஆணையர், ஆச்சார்யலு கூறியதாவது: முன்னாள் பிரதமர் சாஸ்திரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, பொதுமக்களில் சிலர் கருதுகின்றனர். அதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. ரகசியம் காக்கப்படும் ஆவணங்களின் பட்டியலில் வருவதால், தகவல் ஆணையத்தால், இந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்.
ரஷ்யாவின் தாஸ்கன்டில், மாரடைப்பால் சாஸ்திரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது மரண விசாரணை குறித்த, எந்த ஒரு ஆவணமும், ராஜ்யசபாவில் இல்லை. பார்லிமென்டில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் பதிவு செய்யப்படும் நிலையில், முன்னாள் பிரதமரின் மரண விசாரணை குறித்த குறிப்புகள் பதிவாகாமல் மாயமானது ஆச்சரியம்அளிக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர், சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த ரகசிய ஆவணங்களை, மத்திய அரசு பகிரங்கப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல், சாஸ்திரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதப்படும் சந்தேகத்தை போக்க, அது குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவது குறித்து, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

