19ஆவது திருத்த சட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்று கூறுபவர்கள் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நிலைமாறுகால நீதிக்காய் அரசியல்வாதிகளை அணுகுதல் என்னும் தலைப்பிலான நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“கடத்தப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீட்கவில்லையென்று தற்போது கடத்தியவர்கள் ஒப்பாரி வைக்கின்றார்கள்.
காணாமல்போனவர்கள் எங்கோ இருப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் நாங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கின்றபோது கடத்தப்பட்டவர்களுக்கு கடத்தியவர்கள் யாரென தெரியக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் சாட்சியங்களாக மாறிவிடுவார்கள் என்பதற்காகவும் அவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டினை யார் ஆட்சிசெய்கின்றார்கள் என்பதைவிட அடிப்படைவாதம் இந்த நாட்டினை ஆட்சிசெய்கின்றது. அடிப்படைவாதிகள் செய்த கொலைகளை, கடத்தல்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கங்கள் தயாராக இல்லை.
ஆட்சிமாறினாலும் காட்சி மாறினாலும் கடத்தல், கொலைகளை செய்தவர்கள் தற்போது கதாநாயகர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.
ஆகவே இந்த நாட்டில் நீதியென்பது ஒரு இனரீதியாக, மதரீதியாக, ஒரு கட்சி ரீதியாக பார்க்கப்படும் நிலைமை காணப்படுகின்றது” என மேலும் தெரிவித்தார்.