கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டைமீறி சமூகத் தொற்றாக மாறியுள்ளது. எனினும், அரச தரப்பிலிருந்து இந்த தகவல் மறைக்கப்படுகின்றது.என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
கொரோனா வைரஸ் தொற்று அரச பொறிமுறையின் கட்டுப்பாட்டை மீறி தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. நாளாந்தம் 800 – 900 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் 300 ஐத் தாண்டியுள்ளது. எனினும், சமூகத் தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதை அரசு இன்னும் ஏற்க மறுக்கின்றது. அரச அதிகாரிகளும், அரசுக்குத் தேவையான அறிவிப்புகளையே இது விடயத்தில் விடுத்து வருகின்றனர்.
முன்னாள் கொத்தணிகள் உருவாகின. மினுவாங்கொடை, பேலியகொட என அதற்கு பெயர் இருந்தது. தற்போது அவ்வாறானதொரு நிலை இல்லை. எல்லா இடங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதாவது சமூகத்தொற்று ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அரசு இதனை ஏற்றுக்கொண்டு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
குறுகிய காலப்பகுதிக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டம் அரசிடம் இல்லை – என்றார்.

