ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால் முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல் சாத்தியப்படாதென தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இருபதாவது திருத்தத்தை ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களை விமர்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காருக்குப் பதிலளிக்கும் வகையில் நஸீர் அஹமட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களைப் பற்றி விமர்சிக்குமளவிற்கு, மரிக்கார் எம்பிக்கு அரசியல் சாணக்கியம் இருக்கும் என நான் கருதவில்லை.
தனித்துவ கட்சியின் ராஜதந்திரங்களைத் தெரிந்து கொள்ளும் அறிவும் மரிக்காருக்கு இல்லை. வெறும் அபிவிருத்தி அரசியல் கோஷம் செய்யும் மரிக்கார் எம்பி, உரிமை அரசியலுக்குள் மூக்கை நுழைக்கக் தகுதியற்றவர்.
வடக்கு கிழக்கின் மேய்ச்சல் தரைகள் பறிபோவது பற்றியும் இவருக்குத் தெரியாது. திட்டமிட்டவாறு காணிகள் பறிபோவதால் ஏழை விவசாயிகள் படும் அவஸ்தையும் மரிக்காருக்குப் புரியாது. அரச உயர் பதவிகளில் சிறுபான்மை இனத்தவரை உள்வாங்குவதற்காக நாங்கள் எதிர் நீச்சலடிப்பது பற்றியும் மரிக்காருக்கு விடய ஞானம் இருக்காது.
.நவீன குளியலறையில் குளிக்கும் மரிக்கார் வாய்க்கால் வரப்பு நீர்ப்பாய்ச்சல் விவசாயம் பற்றி எதுவும் அறியாதவர்.
பேரினவாதத்துக்கு மட்டும் சாமரம் வீசும் மரிக்கார் எம்பி சிறுபான்மை அரசியலின் அபிலாஷைகள் பற்றி நன்கு ஆய்வு செய்தால் அவருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்துவிடும்.
சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளும் இலட்சணத்தில் உள்ள கட்சியில் இருக்கும் மரிக்கார் எம்பி எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வார் என்றும் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பினார்.
இருபதை ஆதரித்ததன் நோக்கத்துக்குப் பின்னால் சமூகங்களுடனான இணக்கப்பாடு உள்ளது. இதை, மரிக்கார் புரிந்து கொள்ளல் அவசியம்.
ஏனைய சமூகங்களிடமிருந்து முஸ்லிம்கள் தனிமைப்படுதல் மற்றும் அந்நியப்படும் நிலைமைகளை இல்லாமல் செய்யும் சிந்தனைகளும் இந்த ஆதரவில் உள்ளன.
அத்துடன் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்புக்கான உத்தரவாதம் ஜனாஸாக்களை அடக்குதல் ஆகியவையும் இதில் தங்கியுள்ளன.
அதுமாத்திரமன்றி இழந்துபோன முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசல் சக்தியை வேறு வகையில் நிரூபிக்கும் இராஜதந்திரங்களும் இதில் அடங்கி உள்ளன. மரிக்கார் எம்பி இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடின் புரியும் வரை வாய்மூடி இருக்க வேண்டும்.
தமிழ் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் சுமார் 12 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சஜித்பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு தேசியப்பட்டியலையேனும் வழங்காமல் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்குப் பாரிய துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

