கே.ஜே.ஜேசுதாசுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தது ஏன்?- அவரே விளக்குகிறார்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார்.
நேற்று சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
செய்தியாளர்களிடம் இது பற்றி பேசுகையில், 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவர் மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம். பூர்வஜென்மத்தில் அவர் புண்ணியம் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டார் .