அரசாங்கத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிராகவே அரசாங்கம் செய்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வரவு -செலவு திட்டம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே அரசாங்கத்தை காப்பாற்றியது.
இவ்வாறு அரசாங்கத்தை தொடர்ச்சியாக காப்பாற்றியமைக்கு கூட்டமைப்பு தெரிவித்த காரணம், அரசாங்கத்தை வைத்துதான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் கூறியவற்றில் ஒரு பகுதியைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வு வழங்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாது இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே தமிழர் பகுதிகளில் அதிகமான பௌத்தமயமாக்கல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகிறது” என மேலும் தெரிவித்துள்ளார்.

