வார்த்தையில் ஒற்றையாட்சி என்று கூறிக் கொண்டு கூட்டாட்சி அலகுகளைப் பூரணமாக உள்ளடக்கி அரசமைப்பைத் தயாரிக்கவே அரசு முயற்சிக் கின்றது. பெயரளவில் ஒற்றையாட்சி என்று கூறிக்கொண்டு நாட்டைப் பிரிக்கவே இவர்கள் முயற் சிக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டும். இல்லையே நாடு அழிவதை – பிளவு படுவதைத் தடுக்க முடியாது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
போரால் நாட்டைத் துண்டாட முடியாமல் போனதை அரசு இன்று புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்ற முயற்சிக்கின்றது.
ஆயுதத்தின் மூலமாகச் செய்ய முடியாத நகர்வுகளை இன்று சட்டத்தின் மூலம் புதிய அரசமைப்பில் உள்ளடக்கி நாட்டைத் துண்டாடும் வேலைத்திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றது.
பொது வாக்கெடுப்பு மூலமாக புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.
பௌத்த தேரர் ஒருவரும் அவருக்குத் துணைபோய் புதிய அரசமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் மக்கள் ஆதரவில் புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக் கூறுகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு அரசமைப்பைப் புதிதாக உருவாக்க மக்கள் ஆணை கிடைக்கவில்லை.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரம் மக்கள் ஆதரவு இருந்தபோதிலும் அவரது கொள்கைப் பிரகடனத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதாக எங்கும் சொல்லவில்லை. மக்களின் கருத்தறியும் நடவடிக்கைக்கு அப்பால் உள்ள சில காரணிகளையும் உள்ளடக்கப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிைடக்கவில்லை. அவர்களுக்கு அதிக ஆசனங்கள் என்றாலும்கூடஅது முழுமையான ஆதரவு அல்ல.
மைத்திரபால சிறிசேனவின் கூட்டணியும், ஹக்கீம் உள்ளிட்ட சிறு கட்சிகளின் ஆதரவிலே இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைத் தக்கவைத்து வருகின்றனர். மிகவும் நெருக்கடியான நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைகொடுத்து அரசைத் தக்க வைத்து வருகின்றனர்.
தலைமை அமைச்சர் ரணில் கூறினால் போதுமானது இவர்கள் உடனடியாக ஆதரவைத் தெரிவித்து விடுவார்கள் என்றார்.