பலாலி பகுதியில் இராணுவத்தின் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னரே மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (திங்கட்கிழமை) வரவு செலவு திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மீள்குடியேற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “ நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் வலி. வடக்கில் பல ஏக்கர் காணிகளை வழங்கியிருக்கின்றோம். பலாலி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிகளை 25 வருடங்களாக கடந்த அரசாங்கம் கொடுக்கவில்லை.
போர் முடிவுற்று 8 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தினை மாற்றிய பின்னரே மீள்குடியேற்றம் சாத்தியப்பட்டது.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் வலி. வடக்கு மற்றும் கிளிநொச்சி உட்பட முல்லைத்தீவு மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் மக்களின் காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களிலும், தனியார் காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. அதற்குரிய முழு வேலைத்திட்டங்களும் வலி. வடக்கில் நடைபெற்று வருகின்றன.
போர் முடிவுற்ற பின்னர் பலாலி பகுதியில் இராணுவத்தின் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆயுதங்களை இராணுவத்தினர் வெளியில் கொண்டு செல்ல வேண்டும்.
அதற்குரிய வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆயுதக் களஞ்சியத்தினை வேறு இடங்களுக்கு மாற்றி, ஆயுதக் களஞ்சியங்கள் அகற்றப்பட்ட பின்னர், அந்தக் காணிகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

