காடழித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மேலும், இக்குடியேற்றங்களுக்கு, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர் உட்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் துணைபோகின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
ஒரு சில அரசியல்வாதிகள், தங்களுடைய அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக, குளாமுறிப்பில் காடழிப்பு செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக, பாராளுமன்றில் நான் பேசியுள்ளேன். அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கிருந்திருந்தார்.
அரசியல் ரீதியாக அதிகாரம் உள்ளவர்கள் சிலர், கடந்த ஆட்சிக் காலத்தில் இழைத்த தவறை, இப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இழைக்கின்றார்கள். இவர்களுடைய தவறான செயற்பாடுகளும் அந்த மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களமும் உடந்தையளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்