‘டாடா’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு தமிழ் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கிஸ்’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நடன இயக்குநராக பணியாற்றி திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள’ கிஸ்’ எனும் திரைப்படத்தில் கவின், பிரீத்தி அஸ்ராணி, பிரபு, வி. டி வி கணேஷ், ஆர் ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பொழுதுபோக்கை மையப்படுத்தி ஜாலியாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவரும் 19 ஆம் திகதி முதல் மகிழ்ச்சியுடன் படமாளிகைக்கு வருகை தந்து, உற்சாகத்துடன் திரும்பி செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதனிடையே ‘கிஸ்’ எனும் படத்தின் தலைப்பு – இயக்குனர் மிஷ்கினிடம் இருந்ததாகவும், அவரிடம் கதையைக் கூறி, இதற்கு ‘கிஸ்’ எனும் தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்று கேட்டவுடன்… பெருந்தன்மையுடன் உடனடியாக ஒப்புக்கொண்டாராம். அத்துடன் இந்த திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – கதையை பார்வையாளர்களுக்குச் சொல்லும் கதாபாத்திரத்தை தன் குரலால் மெருகேற்றிருக்கிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.