காவிரி விவகாரத்தில் ரஜினி, தமிழகத்திற்கு ஆதரவாக பேசி வருவதால் அவர் நடித்துள்ள காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்திருப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என வர்த்த சபைக்கும், கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் ரஜினி ரசிகர் மன்றத்தினர் கடிதம் அளித்துள்ளனர். கர்நாடகாவில் காலா ரிலீஸ் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தக சபை பார்த்துக் கொள்ளும் என ரஜினி கூறி இருந்தார். இந்நிலையில் காலா பட ரிலீஸ் பற்றி கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
அதில், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை பற்றி பரிசீலித்து வருகிறேன். காலா பட ரிலீஸ் தொடர்பாக மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்கள் வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அரசு தலையிட முடியாது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஏற்கனவே காலா படத்தை திரையிட வேண்டாம் என முடிவு எடுத்து விட்டது என்றார்.