கனேடிய இராணுவ வீரர் சடலமாக கண்டெடுப்பு
கனேடிய இராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜோர்ஜியன் பே நீர் சுத்திகரிப்பு பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோவா ஸ்கோட்ஷியாவைச் சேர்ந்த 19 வயதான ஆன்ரூ ஃபிட்ஸ்கெரால்ட் என்ற கனேடிய இராணுவ வீரரை சுமார் ஒருவார காலமாக காணாவில்லை என்ற நிலையில் கனேடிய இராணுவத்தினர், ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மற்றும் உள்ளூர் பொலிஸார் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே ஜோர்ஜியன் பே நீர் சுத்திகரிப்பு பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள குறித்த இராணுவ வீரர் பட்டமளிப்பினை கொண்டாடும் வகையில் வெளியே சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இவருடைய மரணம் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தேடுதலின் போது இவ்வாறான ஒரு முடிவினை தாம் எதிர்பார்க்கவில்லை எனினும் துன்பகரமான தகவலே தமக்கு கிடைத்திருப்பதாவும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இறப்பில் சதிச்செயல்கள் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.