கட்சி மீதும், தலைமைத்துவத்தின் மீதும் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. எமது கட்சியில் சர்வாதிகாரத்துக்கு இடம் கிடையாது. படுக்கையறைகளுக்குள்ளிருந்து கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யும் கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தரப்பினதும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு ஆதரவு தேடும் எண்ணத்தில் செயற்படப் போவதில்லை. கருத்து முரண்பாடுகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவும், செயற்குழுவும் காலம் தாழ்த்தாமல் ஜனநாயக வழியில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் கட்சித் தலைவரிடம் இது குறித்து எழுத்து மூலம் கேட்டுள்ளேன்.
கட்சிக் கட்டுக்கோப்பை மீறி ஒருபோதும் செயற்படப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டுமென்று மக்கள் விடுத்த வேண்டுகோளுகிணங் கவே போட்டியிடத் தீர்மானித்தேன்.
கட்சியில் வேறு யாரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர்களுக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. செயற்குழுவும், பாராளுமன்றக்குழுவும் கூடி ஜனநாயக ரீதியில் கட்சி யாப்புக்கமைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் அவசியம் கருதி வாக்கெடுப்பை நடத்தி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியும். எத்தகைய முடிவுவந்தாலும் நான் கட்சியை விட்டுப் போகப்போவதில்லை. கட்சியை உடைத்து சின்னா பின்னப்படுத்துவது எனது விருப்பமல்ல.
ஜனாதிபதி தேர்தவுக்கான அறிவிப்பு அடுத்துவரும் சில தினங்களுக்குள் வெளிவரலாம். எனவே வேட்பாளர் தெரிவை மேலும் தாமப்படுத்தாமல் கூடிய விரைவில் வேட்பாளரை தெரிவு செய்து அறிவிக்குமாறு, கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளேன். அவர் மீது எனக்குப் பூரண நம்பிக்கை இருப்பதால்தான் நம்பிக்கையோடு இக்கடிதத்தை எழுதினேன்.
சிலர் சிறிய கருத்து முரண்பாட்டை பூதாகரமாக்கிக் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஏதோ இலாபம் தேட முனைவதாகவே தெரிகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

