அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரத்தின் அளவுக்கு கடலில் பரந்து விரிந்து கிடக்கும் பியூமிஸ் படலம், பவளப்பாறைகளை மீட்டெடுக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதி, தென்பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யும்போது இந்த பிரம்மாண்ட பியூமிஸ் படலத்தை கண்டறிந்துள்ளனர். கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிக்கும்போது அதில் இருந்து வெளிவரும் சூடான லாவா, கடல் நீரால் குளிர்விக்கப்பட்டு பியூமிஸ் பந்துகள் உருவாகின்றன.
அந்த வகையில் வட டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் உருவான இந்த பியூமிஸ் கற்கள் 150 சதுர கிலோ மீட்டருக்கு பரவி கிடக்கிறது. இது 20 ஆயிரம் கால்பந்து மைதானத்துக்கு ஈடானது என்றும் கூறப்படுகிறது. இதனால் கற்கள் நிறைந்த நிலப்பரப்பு போன்று கடல் காட்சியளித்ததாகவும் கடற்கரையில் இருந்து பார்த்தால் அடிவானத்தை தொடும்வரை பரந்து விரிந்து கிடப்பதாகவும் பியூமிஸ் படலம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பிரையன் மற்றும் பிளெட்சர் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கிரேட் பேரியர் பவளப்பாறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பியூமிஸ் படலத்தால் மக்களுக்கோ கடற்கரைக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்படுகிறது. சூறாவளி, பவளவெளுப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கிரேட் பேரியர் பவளப்பாறை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பியூமிஸ் படலத்தில் சிறிய பவளப்பாறைகள் ஒட்டிக்கொண்டு வருவதால் புதிய வரவு அதிகரிக்கும். மேலும் சிதைவடைந்த பவளப்பாறையில் சிலவற்றை புத்துயிர் பெற வைக்க முடியும் என்றும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

