( 2017.11.07 – கொழும்பு, தாமரைத் தடாக கலையரங்கு )
ஒக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற இந்த ஒக்டோபர் புரட்சியானது உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வித்திட்ட ஒரு நிகழ்வாகும். அதன் பெறுபேறாக உலகமே புதியதொரு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. விசேடமாக அபிவிருத்தியின் பாதையில் ஒற்றுமை, பொதுத்தன்மை, மனிதாபிமானம் போன்ற சிறந்த பண்புகள் துளிர்விட்டன. முதலாம் உலக போர் காலத்தில் இடம்பெற்ற இந்த ஒக்டோபர் புரட்சியானது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக நியாயத்திற்காக போராடுவதற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.
எமது நாடு மற்றும் இந்தியா போன்ற 40 ஆம் தசாப்தங்களில் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற நாடுகள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கான படிப்பினையையும் ஒக்டோபர் புரட்சியே பெற்றுத்தந்தது. 50 ஆம் தசாப்தத்தில் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. எஸ்.டபிள்யு.ஆர்.டிபண்டாரநாயக்கவினால் 56 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசாங்கத்துடன் சமூக, பொருளாதார, கலாச்சார புரட்சியும் ஏற்பட இந்நிகழ்வே ஏதுவானது. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட சமூக செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தாற்றல், திறமைகளை திறம்பட வெளிப்படுத்தவும் இந்த சமூகப் பின்னணியே ஏதுவாக அமைந்தது.
சோவியத் ஒன்றியத்திற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படவும் 56ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே காரணமாகும். அக்காலத்தில் இருந்த சிறந்த மனிதரான பேராசிரியர் குணபால மலலசேக்கர அவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டதுடன் எமது அபிவிருத்தி வலுப்பெறத் தொடங்கியது.
சோவியத் ஒன்றியக் கூட்டாட்சி காணப்பட்ட காலத்தில் உலகில் அரசியல் பலசாலிகளாகக் காணப்பட்ட முதலாளித்துவ நாடுகள் மற்றும் சோசலிசக் கொள்கையினைப் பின்பற்றும் நாடுகள் என்பவற்றின் செயற்பாட்டில் எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றிற்காக சோவியத் ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மிகச் சிறப்பானதாகும்.
90 ஆம் தசாப்தங்களில் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியே தற்போது காணப்படும் சர்வதேச தீவிரவாதம் உருவாகக் காரணமாகும் என நான் கருதுகிறேன். உலகம் ஒரே திசையில் பயணிக்க முடியாது. மத்தியஸ்த நிலையை வகிக்க முடியாமல் போனமையே இதற்குக் காரணமாகும். அணிசேரா நாடுகளின் அமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இவை அனைத்தையும் எதிர்நோக்கிய வண்ணம் நாம் எமது பாதையைத் தயார் செய்துள்ளோம்.
கடந்த வருடம் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது ரஷ்யாவின் தற்போதைய பிரதமர் விளாடிமிர் புட்டின் அவர்களுக்கும் எனக்குமிடையே சிறந்த நட்புறவு ஏற்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவுக்கு அரச முறை விஜயம் மேற்கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 44 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த இந்த அழைப்பானது ரஷ்ய ஜனாதிபதியும் அம்மக்களும் எமக்களித்த கௌரவமாகவே நான் காண்கின்றேன். நான் அங்கு விஜயம் செய்தபோது ரஷ்ய ஜனாதிபதியுடன் மிக நீண்ட நேரம் உரையாடினேன். பல இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சோவியத் ஒன்றிய காலத்திலும் தற்போதும் எமது இரு நாடுகளுக்கிடையேயும் காணப்படும் அரசியல் கொள்கைகளின் காரணமாக எமக்கு உண்மையான ஒரு நட்பு நாடாகவே ரஷ்யா காணப்படுகின்றது. கடந்த பல வருடகாலமாக எமக்கு பொருளாதாரம் உள்ளிட்ட பல வழிகளினூடாக ரஷ்யா உதவி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் எனது உத்தியோகபூர்வ விஜயத்தினால் ஏற்பட்ட விளைவுகளும் நாடுகளுக்கிடையிலான தொடர்பு பலப்படுவதற்கு ஏதுவாக அமைகின்றது. இதனூடாக எமக்கான ரஷ்யாவின் உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனை நாம் பாராட்ட வேண்டும். எமது நாட்டின் அபிவிருத்திக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அந்நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை நாம் பெரிதும் மதிக்கின்றோம்.
உலகம் பூராகவும் புரட்சிகள் பற்றி முன்னைய காலங்களில் அதிகமாகவும் தற்போது குறைவாகவும் பேசப்பட்டபோதிலும் மனித சமுதாயத்தில் புரட்சிகள் ஏற்பட்ட வண்ணமே காணப்படுகின்றன. மக்களும் இதற்குத் தயாராகவே இருக்கின்றனர். எனினும் இதற்கான தலைமைத்துவம் குறைவாகவே காணப்படுகின்றது.
இன்று உலகில் தொழில்நுட்ப விற்பன்னர்கள் உருவாகியுள்ளனர். இன்றைய தலைவர்கள் உலகிற்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
நன்றி.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2017.11.09