ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சத்தியம் என்ற பெயரில் புதிய ஊடக பிரசார பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதற்காக மத்திய ஊடக பிரிவொன்றை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திகள் செல்வது குறைவாகவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சத்தியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நாம் சத்தியத்தை நாட்டுக்கு கொண்டு செல்லவுள்ளோம்.
சத்தியம் என்ற வேலைத்திட்டத்தை தாமதமாகி ஆரம்பித்தாலும் அதனை உரிய முறையில் முன்னெடுத்து செல்லவுள்ளோம். இதற்கு ஊடக நிறுவனங்களின் உதவியையும் நாடவுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடகப் பிரிவின் பிரதானியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வு நேற்று சிறிக்கொத்தவில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.