ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முத்தரசன்,
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது.
சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மன்னித்து விட்ட நிலையில், மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஆளுநர் மூலமாக தடுத்து வருவதாக கருதுகிறோம். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியவர்கள் கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், குற்றத்தை மறுத்துள்ள 7 தமிழர்களை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசுக்கு அடிமையாக, எடுபிடி அரசாக உள்ளது. வருமான வரி சோதனை என்ற அடிப்படையில் பா.ஜ.க. அரசு, இவர்களை தொடர்ந்தும் தங்களது அடிமைகளாக வைத்துள்ளது.
நீதிமன்றத்தையும், பொலிஸாரையும் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு மறுத்து வருவதிலிருந்தே மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது“ என அவர் கூறியுள்ளார்.
