”அமெரிக்காவின், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர், மைக்கேல் பிளினுக்கு எதிரான விசாரணையை நிறுத்தும்படி, எப்.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ஜேம்ஸ் கோமேவுக்கு உத்தரவிடவில்லை,” என, அந்நாட்டு அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, மைக்கேல் பிளின், ரஷ்யாவுக்கு எதிராக தடை விதிப்பது குறித்து, ரஷ்ய துாதர் செர்கே கிஸ்ல்யாக்குடன் விவாதித்ததாக கூறியது பற்றி, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., விசாரித்தது. அப்போது, எப்.பி.ஐ.,யிடம், மைக்கேல் பிளின், பொய் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மே மாதம், மைக்கேல் பிளின், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அப்போதைய, எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ் கோமேவும் நீக்கப்பட்டார். அதன்பின், செனட் குழு முன், விளக்கம் அளித்த, ஜேம்ஸ் கோமே, ‘மைக்கேல் பிளின் மீதான விசாரணையை கைவிடும்படி, அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டார்’ என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜேம்ஸ் கோமேவின் குற்றச்சாட்டை, அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். மேலும், கடந்தாண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது, ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து திட்டம் எதுவும் போடவில்லை என்றும், டிரம்ப் கூறினார்.