தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் கின்னஸ் பக்ரு. மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர், ‘குட்டியும் கோலும்’ என்கிற ஒரு படத்தையும் இயக்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள இளையராஜா என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் பக்ரு.
உயரம் குறைந்த ஒரு சராசரி மனிதன், தனது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதையும், வாழ்க்கை முழுவதும் பிரச்சனை என்பது தொடர்கதை அல்ல என்கிற ஒரு மெசேஜையும் இந்த படம் சொல்கிறதாம். சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி, நடிகர் திலீப்பிற்கு திரையிட்டு காட்டப்பட்டது.
படத்தை பார்த்த திலீப், கின்னஸ் பக்ருவின் நடிப்பையும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியையும் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்து போனாராம். மேலும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த படம் பற்றி குறிப்பிட்டு, ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளுடன் இந்த ‘இளையராஜா’ படத்தை சென்று பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.













