இலங்கை அணியை புரட்டி எடுத்த மேக்ஸ்வெல்ஸ்: சாதனையின் உச்சிக்கு சென்ற அவுஸ்திரேலியா அணி
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் மெக்ஸ்வல்ஸின் அதிரடி ஆட்டத்தால் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இலங்கையில் உள்ள பல்லேகெல மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அவுஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மேக்ஸ்வெல்ஸ், வார்னர் ஆகியோர் ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடத்தொடங்கினர். இதனால் அவுஸ்திரேலியா அணி 5 ஓவர்கள் முடிவதற்குள் 50 ஓட்டங்களை குவித்தது.
அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வார்னர் 28 ஓட்டங்கள் எடுத்த போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சென்னன்கையா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்த அவுஸ்திரேலியா துடுப்பாட்டக்காரர் மெக்ஸ்வல்ஸ் ஓவருக்கு ஒரு சிக்ஸர் என பறக்க விட, இவருக்கு ஈடு கொடுத்து ஆடிய காவாஜா 22 பந்தில் 36 ஓட்டங்கள் குவிக்க அணியின் சராசரி மளமளவென எகிறியது.
அவுஸ்திரேலியா அணி 154 ஓட்டங்கள் பெற்ற போது காவாஜா(36) பத்திரானா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மேக்ஸ்வெல்ஸ் விட்டபாடில்லை 65 பந்தில் 145 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 9 சிக்ஸர் மற்றும் 14 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.
அவுஸ்திரேலியா அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 3 ஓவர்கள் வீசி 46 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.
இமாலய இலக்கை விரட்ட துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க ஆட்டக்காரர்களான பெரேரா 4 ஓட்டங்களிலும், டில்ஷன் 4 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இலங்கை அணியின் சராசரி ஆமை வேகத்தில் நகர்ந்தது. இதன் காரணமாக அடுத்து வந்த வீரர்கள் அடித்து ஆட திட்டமிட, அவர்களுக்கு அது பலன் அளிக்காத காரணத்தினால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இருப்பினும் இலங்கை அணிக்கு ஆறுதலாக சண்டிமால் 43 பந்தில் 58 ஓட்டங்களும், கபுகேத்ரா 25 பந்தில் 43 ஓட்டங்களும் குவித்ததே அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.
அவுஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த மேக்ஸ்வெல்ஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி வருகிற 9 ஆம் திகதி பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேலும் 263 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா அணி, இதற்கு முன்னர் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 260 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியின் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.