இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மற்றும் கையிருப்புக்கள் தொடர்பாக அண்மையில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 9.1 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. எனினும் எதிர்வரும் ஜூன் நடுப்பகுதி அளவில் அது 11 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாகவும் அரசாங்கத்தின் காத்திரமான செயற்பாடுகளினால் அது இந்தளவு முன்னேற்றத்தை காட்டுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ள கடன் தொகையின் அடுத்த பகுதி எதிர்வரும் ஜூன் மாதம் முற்பகுதியில் கிடைக்கவுள்ளதாகவும், இதற்கிணங்க அத்தொகை 250 மில்லியன் அமெரிக்க டொலராகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2018 ஜூன் மாதத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டதில் கிடைக்கவேண்டிய இறுதித் தவணை நிதியான 558 மில்லியன் அமெரிக்க டொலர் ஜூன் மாதத்தின் 2வது வார பகுதியில் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க 2018 ஜூன் மாதம் நடுப்பகுதியளவில் 1.0 பில்லியன் அமெரிக்க டொலரை இணைந்த கடன் சலுகையாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்