நீதித்துறை தொடர்பாக வௌிப்படையாக கருத்துத் தெரிவித்தமைக்காக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானவர்கள் மோசடியாளர்கள் என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்; “..நாட்டின் நீதித்துறை மற்றும் பக்கச்சார்பின்மை குறித்து நான் வௌிப்படையாக கருத்துக்களை வௌியிட்டேன்.
அதற்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு மற்றும் இன்னொருவரும் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தரணிகள் சங்கமும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனக்கெதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன். மேலும், வழக்கு விசாரணையின் போது வௌிப்படுத்துவதற்காக என்னிடமும் ஏராளமான தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன…” எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.