இராணுவ முகாம் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி
நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள இராணுவ முகாமின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
யோபே மாநிலத்தில் உள்ள புனியாடி இராணுவ முகாமுக்குள் நேற்று பின்னிரவு புகுந்த போக்கோஹரம் தீவிரவாதிகள் 5 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதாகவும், இராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர்னோ மாநில தலைநகரான மைடிகுரி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நேற்று போக்கோஹரம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.