கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் செய்வினை அகற்றுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெயந்திநகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் அதிகளவிலான கடன் ஏற்பட்டுள்ளமையில் மிகவும் மனமுடைந்த அவர், பில்லி, சூனியம், பேய்கள், செய்வினைகள் அகற்றும் பூசாரி ஒருவரிடம் சென்று தனது குறைகள் தொடர்பில் முறையிட்டுள்ளார்.
இதன்போது குறித்த வர்த்தகருக்கு செய்வினையுள்ளதாக கூறிய பூசாரி, செய்வினையை அகற்றிவிட்டால் கடன் தொல்லைகள் அகலும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த குறித்த வர்த்தருக்கு செய்வினையை அகற்றுவதற்காக ஒருவகை மருந்தை குடிப்பதற்காக பூசாரி கொடுத்துள்ளார்.
இரு தினங்களுக்கு இந்த மருந்தை அருந்த வேண்டும் என பூசாரி கூறியுள்ளார். மருந்தை அருந்திய வர்த்தகருக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதனை பூசாரியிடம் வர்த்தகர் தெரிவித்த போது, செய்வினை அகலுவதற்கான அறிகுறி எனக் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக வர்த்தகருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டத்தை தொடர்ந்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் துரிதமாகச் செயற்பட்ட போதும் இவருக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

