தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். * இதையடுத்து ராணுவ தளவாட நிதி உதவி உள்பட ரூ.7 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா இந்த ஆண்டு நிறுத்தியது.* பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் டிரோன் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தனது தேர்தல் வெற்றி பேச்சில் இம்ரான்கான் கண்டித்துள்ளார். * இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செப்டம்பர் 5ல் பாகிஸ்தான் சென்று இம்ரான்கானை சந்தித்து பேச உள்ளார்.வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,’ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இம்ரான்கானுக்கு வாழ்த்து கூறிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார். மேலும் பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரத் வாசித்தார். இதை அறிந்ததும் பாகிஸ்தான் கடும் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. அவர் தனது டுவிட்டரில்,’ பிரதமர் இம்ரான்கான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே நடந்த போன் உரையாடல் குறித்த சரியான தகவலை மட்டுமே அமெரிக்கா வெளியிட வேண்டும். அவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனவே அதை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.அமெரிக்காவின் அறிக்கை சர்ச்சையானது குறித்து நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரத் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,’ பாம்பியோ மற்றும் இம்ரான்கான் இடையிலான பேச்சுவார்த்தை நல்லமுறையில் அமைந்தது. அமெரிக்கா ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக உள்ளது. மேலும் புதிய அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இருவர் இடையிலான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது’ என்றார்.

