இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொலை மிரட்டல்: தூக்கமின்றி தவிக்கும் குடும்பத்தினர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றித் தலைவர்களாக திகழ்ந்தவர்களில் கங்குலியும் ஒருவர். கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள இவர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற பின்பு மேற்கு வங்கம் மாநில கிரிக்கெட் வாரியத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவில் உறுப்பினராகவும் சவுரவ் உள்ளார். இவர், வரும் ஜனவரி 19 ஆம் திகதி அன்று மேற்கு வங்கத்தில் மித்னாப்பூர் என்ற இடத்தில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சவுரவ் கங்குலி கொலை செய்யப்படுவார் என, மர்ம நபர் ஒருவர் அவரது தாயாருக்கு கடிதம் மூலமாக, மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி அன்று இந்த கடிதம் கிடைத்ததாகவும், இதன்பேரில் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தனக்குப் பயம் ஏதும் இல்லை என்றும் கூறிய அவர், தனது தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களே அதிகம் அச்சப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.